×

சிலைக்கடத்தல் வழக்கு : பாஸ்போர்ட்டை திருப்பி தரக்கோரிய ரன்வீர் ஷா மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

சென்னை : சிலைக்கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை திருப்பி வழங்கக் கோரிய ரன்வீர் ஷா மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தல் தொடர்பாக ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கடந்த செப்., 27ம் தேதி சென்னையில் உள்ள தொழிலதிபதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கற்சிலைகள், தூண்கள் மற்றும் ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கிண்டியில் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் சாமி ஊர்வல வாகனங்கள் உட்பட 6 கலை பொருட்களை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ரன்வீர்ஷாவின் கூட்டாளி கிரண்ராவிற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அங்கு மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் ஜாமீன் வழங்கக்கோரி இருவரும் மனு தாக்கல் செய்த நிலையில், பாஸ்போட்டை ஒப்படைக்க உத்தரவிட்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் சிலைக்கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை திருப்பி வழங்கக்கோரி ரன்வீர் ஷா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வெளிநாட்டில் உடல்நிலை சரி இல்லாமல் உள்ள தனது தாயை பார்க்க வேண்டும் என்பதால் பாஸ்போர்ட்டை திருப்பி தர அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க மறுப்பு தெரிவித்து ரன்வீர் ஷாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


Tags : High Court , Statue Smuggling, Passport, Ranveer Shah, High Court
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...